Featured Events & Programs


Banner


Banner
Class Info

கட்டுரைகள்

உடல், உளவள மேம்பாட்டில் யோகாசனம்:

கற்றதும் பெற்றதும்

திருமதி. வசந்தா நடராசன் டீ.யு.இ
(இலங்கை வானொலி முன்னாள் தயாரிப்பாளர், எழுத்தாளர்)

பிறந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பல்வேறு விதமான கலாச்சார வேறுபாடுகளுடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே பாதிப்பனவாகக் காணப்படுகின்றன. புதிய கலாச்சாரப் பின்னணியும், அதனோடு சங்கமிக்கநேரும்பொழுது ஏற்படும் விளைவுகளும் எண்ணிலடங்காதவையாகக் காணப்படுகின்றன. குறிப்பாக மனஅழுத்தம் மக்களை வாட்டும் மிகப்பெரிய நோயாக உருவெடுத்துள்ளது. இதன் பிரதிபலிப்பாக நோய்களினால் தாக்கப்பட்டு, தமது வாழ்க்கையைத் துன்பத்தோடு கழிக்கவேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு தேவைக்கு மிஞ்சிய ஆசைகள், போட்டி, பொறாமை, குழந்தை வளர்ப்பிலே ஏற்பட்டுள்ள புதிய கலாச்சார இடைவெளி, திருமணத்தால் ஏற்படும் பிரச்சினைகள் என பல்வேறு விதமான பிரச்சினைகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் முகங்கொடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியான தீர்வுகள் பொருத்தமாக அமைகின்றதா? என்று சிந்திக்கவேண்டும். தற்காலத்தில், தற்காலிக நிவாரணங்களை மட்டுமே கொடுக்க முடிந்த அறிவியல் வளர்ச்சியால் மக்களுக்கு அமைதியைக் கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மையான நிலைப்பாடாகக் காணப்படுகின்றது. ஆனால் எமது முன்னோர்களாகிய யோகிகளும், ஞானிகளும் ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உடல், உள வளத்தையும், நலத்தையும் கொடுக்கின்ற வழிமுறைகளைத் தெளிவாகக் கூறிச் சென்றுள்ளனர். இவற்றுள் முக்கியமானவையாக யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி தாவரஉணவுமுறை, ஆயுர்வேத வைத்தியமுறை என்பவற்றைக் கருதமுடியும். நம் முன்னோர்களால் 84 இலட்சம் வரையிலான யோகாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கற்றறிந்தோர் கூறியுள்ளனர்.

தற்காலத்திலே மேலைத்தேயத்தவர்கள், உடல், உளவளத்தைக் கொடுக்கும் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் தாவரஉணவுமுறைகளில் பெரிதும் நாட்டங்கொண்டவர்களாக விளங்குகின்றனர். மேலைத்தேய பாடமுறைகளில் இவைகள் சேர்க்கப்பட்டுக் கற்பிக்கப்படுவது, இவற்றின் சிறப்புக்களை உணர்த்துவதாகக் காணப்படுகின்றது. புலம்பெயர்ந்த தமிழ்மக்களிலும் மேற்கூறிய பயிற்சிமுறைகளை முறையாகக் கற்றறிந்த பலர் காணப்படுகின்றனர். ஒவ்வொருவரும் தமக்கேற்ற வழிமுறைகளில் இவற்றைக் கற்பித்து வருகின்றார்கள்.

யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி என்பன ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன. இவற்றைக் கற்போர் இருவகையினராகக் காணப்படுகின்றனர். உடல் உபாதைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெற விரும்புவோர் ஒரு வகையினராகவும், ஆன்மீகத் தேடலில் நாட்டங்கொண்டு தொடர்ந்து கற்போர் இன்னொரு வகையினராகவும் காணப்படுகின்றனர்.

இந்த வகையிலே கனடாவில் ரொறன்ரோ, ஸ்காபறோ பெரும்பாகத்தில், ஆசான் ரமணன்ஜீ அவர்களால் நடத்தப்படுகின்ற இன்சுடர் யோகா பயிற்சி நிலையம் பெரும்பணியாற்றி வருகின்றது. இங்கு யோகா செய்து பலனடைந்தோர் வாயிலாக இந்நிலையத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு, யோகப்பயிற்சிகளைக் கற்கும் ஆர்வத்திலும், மனச்சுமைகளிலிருந்து அமைதிபெறும் நோக்கிலும், எமது குடும்பஅங்கத்தவர்களுடன் யோகாவை முறையாகக் கற்பதற்கு இன்சுடர் யோகா மையத்தில் இணைந்தேன். இப்பயிற்சிநிலையம் ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. தற்பொழுது ரமணன்ஜீ அவர்களால் நடத்தப்படும் யோகாசனப்பயிற்சி மையங்கள் பல இடங்களிலே நடத்தப்படுகின்றது. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் எண்பது வயதைக் கடந்த பெரியவர்கள் வரை இப்பயிற்சி நிலையத்திலே யோகா தியான முறைகளையும், மூச்சுப்பயிற்சிகளையும், கடைப்பிடிக்கப்படவேண்டிய உணவு முறைகளையும் கற்று வருகின்றார்கள்.

இன்சுடர் யோகா மையத்தின் குருவாக விளங்கும் ஆசான் ரமணன்ஜீ அவர்கள், இலங்கையிலும் இந்தியாவிலும் யோக, தியானப்பயிற்சிமுறைகளைக் குருகுல அடிப்படையில் கற்றவர். வயதில் இளையவர். இவற்றைக் கற்பிப்பதில் அன்பு, கருணை, ஆளுமை நிறைந்தவராக விளங்குகின்றார். இப்பயிற்சிமுறைகளால் நல்வாழ்வு வாழும்நெறியை மக்களுக்குத் தெளிவுபடுத்தி வருகின்றார். வாழ்க்கையைச் செவ்வனே நடத்தக்கூடிய தொழிலைக் கொண்டிருந்தபோதிலும், தான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற சமூகநல நோக்குடன், யோகப்பயிற்சி முறைகளை ஆசான் ரமணன்ஜீ அவர்கள் கற்பித்து வருகின்றார்கள். இப்பயிற்சி நிலையம் உடல், உள வள ரீதியில் மக்கள் பயன்பெறும்விதத்தில் அரும்பணியாற்றி வருகின்றது.

கால், கைகளை மடக்கமுடியாத நோய்கள், நாரிப்பிடிப்பு, தலையிடி, கார் விபத்தின்மூலம் ஏற்படும் மறதிநோய், மனஅழுத்தம் போன்றவற்றோடு, உடல் ஆரோக்கியம் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டவர்கள், ஆன்மீக நோக்குடையோர் எனப் பல்வேறு நிலையிலான மாணவர்கள், மேற்கூறிய யோகாசன கற்கைநெறி வகுப்புக்களிலே, இன்சுடர் யோகா மையத்திலே மாணவர்களாக இணைந்து பயன் பெற்று வருகின்றார்கள். பல்வேறு நோய்களோடு வருபவர்களுக்குத் தனிப்பட்டமுறையில் கவனமெடுத்து, அவரவர்களுக்கு ஏற்ற விதமான யோகா, தியான, மூச்சுப்பயிற்சிகளை கற்பித்து, ஆரோக்கியம் பெற உதவுவது, ஆசான் ரமணன்ஜீ அவர்களால் நடத்தப்படும் யோகா பயிற்சிநிலையத்தின், மிகச் சிறப்பான அடிப்படைஅம்சமாக விளங்குகின்றது. அவ்வாறே யோகப்பயிற்சியில் இணையும் ஒவ்வொருவருடைய உடல்நிலை, வயது என்பவற்றைக் கருத்தில் கொண்டு, இலகுவான பயிற்சிகளிலிருந்தே யோகப்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள் என்பன கற்பிக்கப்படும்.

ஆசான் ரமணன்ஜீ அவர்களால் பயிற்சியின்போது கூறப்படும் அறிவுறுத்தல்களும், தூண்டுதல்களும், எவ்வாறான கடினமான ஆசனத்தையும், முயன்று இலகுவில் செய்யும் நிலையை அடைய உதவுகின்றது. ஆரம்பத்தில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு, வகுப்பிலே கற்பிக்கப்படும் சூரிய நமஸ்காரம் போன்ற ஆசனங்களின் விளக்கப்படங்களும், ஆரம்பம் மற்றும் முடிவிலே கூறப்படுகின்ற மந்திரங்கள் அவற்றின் விளக்கங்கள் போன்றவையும் அச்சிலே பதிவு செய்து கொடுக்கப்படும். இதன்மூலம் சொல்லும் மந்திரங்களின் பொருளை அறிந்து சொல்லும் தன்மை மாணவர்களுக்கு ஏற்படுகின்றது. எனது நோக்கில் இவற்றை மூன்று வகையாக வகைப்படுத்த முடியும்.

1. யோக,தியானப்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள்

வாரத்தில் ஆறுநாட்களும் யோக, .தியானப்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள் இடம்பெறும். ஆரம்பத்தில் ஆசான் ரமணன்ஜீ அவர்கள் தனிப்பட்டமுறையில் ஒவ்வொருவராகக் கவனித்து எவ்வாறு மூச்சுப்பயிற்சிகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதையும் ஏனைய பயிற்சிகளையும் கற்றுக்கொடுப்பார்கள். ஓவ்வொருவருடைய நோய்கள், உடல்நலம் ஆகியவற்றை முதலிலேயே கேட்டறிந்த பின்னரே, அவரவர்க்கேற்றமுறையில் யோகாசனப்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் என்பன கற்றுக் கொடுக்கப்படும். ஆரம்பத்தில் இலகுவான பயிற்சிகளைக் கற்றுத் தேறியதும், படிப்படியாக பல பயிற்சிகளையும் மாணவர்கள் செய்யும் நிலை ஏற்படும். இவற்றைப் பயிலுவதற்கு முன், அமைதி, நேரக்கட்டுப்பாடு, ஒழுங்கானவரவு, யோகா செய்வதற்கு முன் கடைப்பிடிக்கப்பட வேண்டிய உணவுமுறை மற்றும் நியதிகள் போன்ற பல விடயங்கள் இலகுவான முறையில் தெளிவுபடுத்தப்படும்.

2. உடல்நலம்பேணும் உணவுவகை

மாதத்தில் ஓரிரு தடவை இவற்றிற்கு அடிப்படையான உடல்நலத்தைப் பேணும் தாவரஉணவுவகைகள், பழங்களின் சிறப்புக்கள் பற்றி, ஆசான் ரமணன்ஜீ அவர்களாலும், அவர்களுடைய துணைவியார் திருமதி. மோகனா ரமணன்ஜீ அவர்களாலும் விரிவுரைகள் நிகழ்த்தப்படும். நம் முன்னோரின் அறிவுரைப்படி, 'உணவே மருந்து மருந்தே உணவு' என்ற கொள்கையின் அடிப்படையில், இவர்களுடைய விளக்கங்கள் தெளிவாக வலியுறுத்தப்படும். உணவுமுறையைச் சரிவரக் கடைப்பிடிப்பதன் மூலம் நோய்களிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான வாழ்வை எட்டமுடியும் என்பதன் அவசியத்தை, இவ்வகுப்புக்களின் மூலம் மாணவர்கள் அறிந்துகொள்ள முடிகின்றது. ஒவ்வொரு தாவர, பழ உணவு முறைகளின் சிறப்புக்கள், நோய்தீர்க்கும் திறன், எந்த அளவிலே இவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்பன போன்ற அம்சங்கள் இவ்விரிவுரைகளிலே இடம்பெறும்.


3. யோகாசனம் பற்றிய குறும்பட விளக்கங்கள்

மூன்றாவது கட்டமாக, குறும்பட விளக்கங்கள் மூலம் தினமும் பழகும் யோகாசனமுறைகளில் ஒன்றைத் தெரிவு செய்து, அதுபற்றிய பல விளக்கங்கள் இடம்பெறும். மாதமொரு தடவை இடம்பெறும் இக்குறும்படவிளக்கத்தின் மூலம், ஒவ்வொரு யோகாசனத்தினாலும் விளையும் நன்மைகள், குறிப்பிட்ட யோகாசனத்தைச் செய்வதனால் எவ்வாறான நோய்களிலிருந்து விடுபட முடியும் என்பதோடு, குறிப்பிட்ட யோகாசனத்தைச் செய்யும்பொழுது நரம்பு மண்டலமும், ஏனைய உறுப்புக்களும் எவ்வாறு செயற்பட்டு, இரத்தோட்டத்தை விரிவுபடுத்துகி;ன்றதென்பது போன்ற பல விடயங்களை குறும்பட விளக்கங்கள் உள்ளீடாகக் கொண்டிருக்கும். குறும்பட விளக்கங்களின்போது தேவையான குறிப்புக்களை, ஆசான் ரமண்ஜீ அவர்கள் தெளிவாக, விரிவாக மாணவர்களுக்கு எடுத்துச்சொல்வார்கள். இப்பயிற்சிகள் மூலம் இங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் நன்மைகள் பெற்றுள்ளனர் என்பதை ஒவ்வொருவரது அனுபவமும் எடுத்துக்காட்டுகின்றது.

எமது அனுபவங்கள்

ஆன்றோர் விட்டுச்சென்ற யோகா,தியான, மூச்சுப்பயிற்சி ஆகியவைபற்றி கற்றவை பலவாயினும், அனுபவங்களால் பெற்றவை அருகியே காணப்பட்டது. இவற்றின் உண்மைநிலையை அறியும் ஆர்வம், ஆன்மீகத்தேடல், மனச்சுமைகளிலிருந்து விடுபடும் நோக்கம் ஆகியன இப்பயிற்சிகளை நான் மேற்கொள்ளக் காரணமாக அமைந்தது. அனுபவங்களே ஆசான் என்பதற்கிணங்க, பல்வேறுவிதமான உடல் உபாதைகளாலும், மன அழுத்தங்களாலும் ஈடுபட்டவர்கள், ஆசான் ரமணன்ஜீ அவர்கள் கற்பிக்கும் யோகாசன வகுப்பிலே ஈடுபட்டு, ஆரோக்கியம் பெற்றதை அறிந்து, ஆர்வத்தோடு இப்பயிற்சி வகுப்பிலே எனது மகன், கணவர் ஆகியோரோடு இணைந்தேன்.

யோகாசனம், தியானம், மூச்சுப்பயிற்சிகளைக் கற்க ஆரம்பித்ததும், பல அனுபவங்கள் எமக்கு ஏற்பட்டது. உடல், உள ரீதியான மாற்றங்களை உடனடியாகவே உணர முடிந்தது. எனது கணவர் திரு. அம்பலவாணர் நடராசன் அவர்களுக்கு நீண்ட நாட்களாக, வலதுகையிலும், வலது தோள்பட்டையிலும் நோ ஏற்பட்டு, சரிந்து உறங்க முடியாத நிலை, பாரங்களைத் தூக்கமுடியாத நிலை இவற்றால் பெரிதும் அவதிப்பட்டார். ஆங்கிலவைத்தியம் மற்றும் கேரளாவில் ஆயுர்வேதவைத்தியம், ரொறன்ரோவில் உள்ளவர்களால் நடத்தப்படும் மசாஜ்வைத்தியமுறைகள் என எதுவும் நோயை மாற்றமுடியவில்லை. பணம் மட்டுமே தண்ணீராகக் கரைந்தது. இந்நிலையில், ரொறன்ரோவில் ஆசான் ரமணன்ஜீ அவர்களால் நடத்தப்படும், யோகாசனப் பயிற்சி வகுப்பில் இணைந்து, தற்பொழுது முழுமையான சுகம்பெற்றுள்ளார். சுகம்பெற்ற பின்பும் தொடர்ந்து இப்பயிற்சிகளை மேற்கொள்வதால் ஆரோக்கியமாகவும், அமைதியுடனும் அவரால் வாழமுடிகின்றது. இப்பயிற்சி வகுப்புக்களுக்குத் தவறாது செல்வதைத் தனது முதற் கடமையாகக் கொண்டு பயிற்சிபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வசந்தா நடராசனாகிய எனது அனுபவம் சற்று வேறுபட்டது. எனது, மகனுடைய உடல்நலக்குறைவு காரணமாக அவரை யோகாசனப்பயிற்சி வகுப்பில் சேர்ப்பதற்காக அழைத்துக் கொண்டு சென்றபோது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலபயிற்சிகளையும் இலாவகமாகச் செய்தமை கண்டு அதிசயித்தேன். நானும் இப்பயிற்சி வகுப்பில் இணைந்தேன்.

புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்து எமது வாழ்வை அமைதியாக நிலைநிறுத்திக் கொண்டபோது, திடீரென வாழ்வில் துன்பங்கள் சூழ்ந்தது. கடந்த எட்டு வருடங்களாகத் தொடர்ச்சியான துன்பங்களை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 2000 ஆம் ஆண்டு எனது அன்பு மகன் படித்துமுடித்து நல்ல பதவியொன்றினை வகித்துவரும் வேளையில், கார் விபத்தில் அகப்பட்டு அதன் மூலம் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டார். இவ்வாறான சூழ்நிலையில் எனது தாய் தந்தையின் மரணமும் பேரிடியாக மனதைத் தாக்கியது. இத்தகைய சூழ்நிலைகளிலெல்லாம் எம்மோடு இணைந்து தாய்க்குத் தாயாக விளங்கி ஆறுதல் வழங்கிய எனது கணவரின் தாயாரின் மரணம் எமது குடும்பத்தை, மிகப் பாரதூரமாகப் பாதித்தது. அவரின் இழப்பைத் தாங்க முடியாது உறக்கமின்றி நாம் தவித்த இரவுகள் பல. இவற்றையெல்லாம் மனக்குகையில் அடைத்து வைத்து வாழ்க்கையைச் சாரமின்றி ஓட்டிக்கொண்டிருந்தவேளையில், ஆசான் ரமணன்ஜீ அவர்களின் தொடர்பு எம்மையும் யோகாசனப் பயிற்சிகளில் ஈடுபடவைத்தது. இதன்பின்னர் எம்மிடையே பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

யோகா. தியானப்பயிற்சிகளின்மூலம் மனம் அமைதியுற்று, வாழ்க்கையின் யதார்த்தங்களையும் உணர முடிந்தது. இவ்வுணர்வினால் தற்பொழுது மன அமைதியுடனும் மகிழ்வுடனும் வாழ முடிகின்றது. ஆழ்ந்து உறங்கமுடிகின்றது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அன்போடு வாழவேண்டும் என்ற உணர்வு மேலோங்கிக் காணப்படுகின்றது. அத்தோடு, யோகாசனப் பயிற்சிகளைத் தொடர்ந்தும் செய்து வருவதால், உடல் ஆரோக்கியமாக விளங்குவதோடு, எண்ணங்களை ஒருமைப்படுத்தி அமைதியோடு, நிதானமாக அன்றாடப் பணிகளைச் செய்ய முடிகின்றது.

இவ்வாறான அற்புதமான ஒரு நிலையை மூச்சுப்பயிற்சிகளும், தியானமும், யோகாசனப்பயிற்சிகளும் எமக்கு அளித்துள்ளன. இப்பயிற்சிகள் காரணமாக உடம்பிலுள்ள தளர்வுநீங்கி, முள்ளந்தண்டுப்பகுதி வலிமைபெற்றுக் காணப்படுகின்றது. வயதின் காரணமாகச் சருமத்திலே ஏற்படுpகின்ற சுருக்கங்கள் நீங்கிவருவதோடு, கண்பார்வையிலும் தெளிவைக் காணக்கூடியதாயுள்ளது. தலைமுடிகொட்டுவது தீராத பிரச்சினையாகக் காணப்பட்டது. ஆசனமுறைகளைக் கற்க ஆரம்பித்தபின்னர் தலைமுடிகொட்டுவது படிப்படியாகக் குறைந்துவிட்டது. எவ்வாறான கடுமையான வேலைகளையும் சிரமமின்றிச் செய்யயக்கூடிய உடல்பலம் ஏற்பட்டுள்ளது. சோர்வு நீங்கி, எழுத்தாளாராகிய எனக்கு எழுத்துத்துறைமூலம் பலவற்றைச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் மேலோங்கியுள்ளது. இவ்வாறான பல அனுபவங்களை, யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்ட குறுகிய காலத்துள் நான் பெற்றுள்ளேன்.

இவ்வாறான அனுபவங்களைப் பெறும் வாய்ப்பை அருளிய இறைவனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.. 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற நிலைப்பாட்டுடன், ஆசான் ரமணன்ஜீ அவர்கள் இவ்வகுப்புக்களை நடத்தி வருகின்றார். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறுவார்கள். தெய்வத்திற்கு அடுத்தபடியாக நலமுடனும், மனவளமுடனும் வாழ உதவும் குருவாகிய ரமணன்ஜீ அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் நலமே வாழ உதவும் இவ்வாறான அரிய வாய்ப்பை அனைவரும் பெற்றும் பயனடையவேண்டும் என்ற நோக்கிலேயே எமது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளேன். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதற்கமைய, உடல், உள நோய்களுக்கு ஆட்பட்டுள்ளோர், யோகாசனம், தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை முறையோடு பயின்று, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வைப் பெற வேண்டும் என்பதே ஆசான் ரமணன்ஜீ அவர்களுடைய பெருவிருப்பமும், எமது விருப்பமும் ஆகும். இவ்வாறான வாய்ப்பை அருளிய இறைவனுக்கு நன்றி.

அன்பே சிவம்.