Featured Events & Programs


Banner


Banner
Class Info

பொதுவான யோகா

யோகாசனப் பயிற்சிகளை சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், நடுத்தர வயதுடைய ஆண்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் பயிலமுடியும். இன்றைய நாகரீக வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து அனைவரும் விடுபடுவதற்கு யோகா உதவிபுரிகின்றது.

யோகாசனம் ஆரம்ப நிலை யோகா, இடைநிலை யோகா என இருபிரிவுகளைக் கொண்டது. ஆரம்ப நிலை யோகாவும் இடை நிலை யோகாவும் ஆசனங்களையும், பிராணாயாமத்தினையும், தியானத்தினையும உடலை சுத்தப்படுத்துதலைக் கொண்டதாக அமைகிறது.

இன்றைய வாழ்க்கை முறை பல நோய்களுக்குக் காரணியாக விளங்குகின்றது. உதாரணமாக மனக்குழப்பங்கள், உணர்வுக்குழப்பங்கள், நித்திரையின்மை, மற்றும் அன்றாட செயற்பாடுகள் போன்ற பல காரணிகள் உடம்பின் உள் இருக்கும் சக்தி சரிவர இயங்கத் தடையாக அமைந்துள்ளது.

ஆரம்ப நிலை யோகா உடம்பில் இருக்கும் உள் சக்தியை சரிவர இயங்க செய்து மனதிற்கும் உடலுக்கும் நன்மையளிக்கின்றது. யோகாவின் ஆரம்பநிலைப்பயிற்சிகள் இலகுவானதாகவும் எல்லோரும் செய்யக் கூடியதாகவும் காணப்படும். ஆரம்ப நிலைப்பயிற்சி முறை உடம்பின் மூட்டுக்களையும், தசைகளையும் சரியான முறையில் வேலை செய்ய உதவியளிக்கின்றது. ஆரம்ப நிலைப்பயிற்சிகளை யோகாப்பயிற்சியில் ஆரம்பநிலை, இடைநிலை அல்லது உயர் நிலை என எந்த நிலையில் இருந்தாலும் அனைவரும் செய்ய வேண்டும்.

இடைநிலைப் பயிற்சியை எந்த வயதினரும் பழகலாம். இடைநிலை யோகா உடம்பை சுத்தம்செய்யும்முறை, ஆசனங்கள், பிராணாயாமப்பயிற்சி இவைகளை கொண்டதாகக் காணப்படுகிறது. இப்பயிற்சி முறையானது உடம்பின் உள்ளே இருக்கும் உறுப்புக்கள், நாளம் இல்லாச் சுரப்பிகள், தசைகள் ஆகியவற்றைக் கசக்கிப் பிழிந்து சரிவர இயங்க உதவுகின்றது. அத்தோடு உடம்பிலுள்ள நரம்புகளையும் சாந்தப்படுத்துவதோடு நாடிகள், சக்கரங்களைச் சரிவர வேலை செய்ய வைக்கின்றது. இடைநிலை யோகப்பயிற்சியானது சக்தியின் வலுவை உடம்பிலும, மனதிலும் செலுத்தும்.

மனிதவாழ்வில் மனக்குழப்பம், மனக்கவலை, மனஅழுத்தம் என்பன மனதை மட்டுமல்ல உடலையும் வெகுவாக பாதிக்கின்றது. உதாரணமாக பதட்டம் கூடிய ஒருவருக்கு நீரழிவு, குடல்எரிவு போன்ற நோய்கள் இலகுவாக ஏற்படும். மருத்துவ நிபுணர்களின் கூற்றின்படி மார்பகப்புற்று நோய், உயர் இரத்தஅழுத்தம் ஆகியன ஏற்பட மனமும் ஒரு காரணியென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய நாகரிக வாழ்க்கைமுறை உடல் ஆரோக்கியத்திற்குரிய உடற்பயிற்சிகளை அளிக்கத் தடையாக அமைந்துள்ளது. இதனால் கழுத்து வலி, முள்ளந்தண்டுப் பிரச்சனை, இடுப்பு வலி, மலச்சிக்கல் போன்ற நோய்கள் உருவாகின்றன. இப்பிரச்சனைகள் அன்றாட கடமைகளைச் செய்வதற்குத் தடையாக அமைந்துள்ளன. இவ்வாறான நிலையிலிருந்து விடுபட்டு உடலும், மனமும் ஆரோக்கியம்பெற உகந்த வழியாக யோகா அமைந்துள்ளது.