![]() ![]() ![]() |
![]() சுவாமி சிதானந்த சரஸ்வதி யோகி
சுவாமி அவர்கள் 1918ம் ஆண்டு பிறந்தார். தனது சிறுபிராயத்திலிருந்தே இறைபக்தனாக வாழ்ந்த இவர் சரியை கிரியைத் தொண்டுகளில் ஈடுபட்டார். இளம் வயதிலையே இவருக்கு யோகக் கலையில் ஆர்வம் இருந்தது. அதன் பொருட்டு சுவாமி அவர்கள் இந்தியாவில் உள்ள பெங்களுரில் கடப்பை சித்தர் ஆச்சிரமத்தில் குரு ஸ்ரீலஸ்ரீ சிவயோகி பசுவலிங்க சுவாமிகளிடம் யோக தீட்சை பெற்றார். யோகாசனத் தொண்டு செய்யும்படி குரு இட்ட ஆணைக்கேற்ப யோகம் பயிற்றுவிக்கும் தொண்டில் ஈடுபட்டார். பின்னர் சுவாமி அவர்கள் இமயமலைக்கு சென்று சுவாமி சிவானந்தரின் அருளினால் அவரிடம் சூக்கும தீட்சை பெற்றார். ரிஷிகேச சுவாமிகளாக அருள் பாலிக்கும் சுவாமி சிவானந்த சரஸ்வதியின் அருட்தீட்சையும் பெற்றார். சுவாமிகளால் சிதானந்த சரஸ்வதி யோகி என்னும் பெயர் சூட்டப்பெற்று ஈழம் திரும்பினார்.
இவர் முதல் முதலாக இலங்கை மாத்தளை மாரியம்மன் கோயிலில் யோகக்கலையினை நடத்திவந்தார். மதிப்பிற்குரிய ஆதினகர்த்தா ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகளின் விருப்பிற்கு இணங்க யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லை ஆதீனத்தில் 1970ம் ஆண்டு வகுப்புக்கள் நடத்த ஆரம்பித்தார். பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள திவ்விய ஜீவன சங்கத்தில் யோகக்கலையைப் பயிற்றுவித்தார். அகில இலங்கை சர்வமத யோகாசன ஸ்தாபனத்தினை நிறுவி திருக்கோணமலை, யாழ்ப்பாணம், மாத்தளை, பாண்டிருப்பு, கல்முனை போன்ற இடங்களில் வகுப்புக்களை நடத்தி பல மாணவர்களை உருவாக்கினார். சுவாமி அவர்கள் இலங்கை முழுவதும் யோகாசனத்தினை ஓர் பாடத்திட்டமாக கொண்டு வருவதற்கு அரசின் அனுமதி பெற்று செயல்படுத்தினார். இன்று இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் நோர்வே, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, கனடா போன்ற பல நாடுகளிலும் சுவாமி அவர்களின் மாணவர்கள் யோகக்கலை வகுப்புக்களை நடத்திவருகின்றார்கள். |